சவால்: முஸ்லிம்கள் குரானை நம்புகிறார்கள், வேதாகமத்தை நம்புவதில்லை. ஏனெனில் யூதர்களும் கிறிஸ்தவர்களும் ஆரம்பத்தில் கொடுக்கப்பட்ட வெளிப்பாட்டை திரித்துக் கறைப்படுத்திவிட்டார்கள் என்று அவர்கள் கருதுகிறார்கள்.
இருப்பினும் அவர்களுடைய இந்த நம்பிக்கைக்கு ஒரு விதிவிலக்கிருக்கிறது: முஹம்மதுவைக் குறித்த தீர்க்கதரிசனம் வேதாகமத்தில் இருக்கிறது என்று குரான் போதிக்கிறது: “…நான் (அல்லாஹ்) அவர்களுக்கு அருளைக் காட்டுவேன்… அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய (நம்)தூதரைப் பின்பற்றுகிறார்கள்; அவர்கள் தங்களிடமுள்ள தவ்ராத்திலும் இன்ஜீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள்; …(சுரா அல் அஃராஃப் 7:156-157; இதை சுரா அல் ஸஃப்ஃபு 61:6-உடன் ஒப்பிடுக). இந்தக் காரியத்தில் குரான் உண்மையானது என்பதை நிரூபிப்பதற்காக, முஸ்லிம்கள் வேதாகமத்தைப் படித்து, சில மேற்கோள்களைக் காட்டி, அவைதான் முஹம்மதுவைக் குறித்த தீர்க்கதரிசனம் என்று காண்பிக்கிறார்கள். மோசேயின் தோராவில் இருந்து முஸ்லிம்கள் காட்டும் மிகமுக்கியமான மேற்கோள் இதுதான்: “உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன்நடுவே உன் சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணுவார்; அவருக்குச் செவிகொடுப்பீர்களாக” (உபாகமம் 18:15; 18-ம் வசனத்தையும் பார்க்க). இந்த வசனத்தில் மோசே முஹம்மதுவைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைப்பதாக அவர்கள் கருதுகிறார்கள். அவ்வாறு அவர்கள் கருதும்போது வேதாகமத்தை ஆழமாக அந்த இடத்தில் நம்புகிறார்கள்.
தோராவிலுள்ள இந்தத் தீர்க்கதரிசனம் கிறிஸ்துவைக் குறித்தது என்றும் முஹம்மதுவைக் குறித்ததல்ல என்றும் கிறிஸ்தவர்கள் நம்புவது முஸ்லிம்களுக்குத் தெரியும். கிறிஸ்தவர்களின் இந்த நம்பிக்கையை மறுக்கும்படி முஸ்லிம்கள் குரானுடைய ஆதாரத்தில் சில வாதங்களை முன்வைக்கிறார்கள்: 1) முஹம்மதுதான் மோசேயைப் போன்றவர். ஏனெனில் மோசேயும் முஹம்மதுவும் தாய்-தந்தையருக்கு இயற்கையாகப் பிறந்தவர். ஆனால் ஈசாவோ மர்யமிடத்தில் இயற்கைக்கு மாறாகப் இறைவனுடைய அற்புதத்தினால் பிறந்தவர். 2) முஹம்மதுதான் மோசேயைப் போன்றவர். ஏனெனில் இருவருமே இறந்துபோய் இவ்வுலகத்தில் அடக்கம்பண்ணப்பட்டார்கள். ஆனால் கிறிஸ்து இறக்கவில்லை. அடக்கம் செய்யப்படவுமில்லை. இன்றும் உயிருடன் பரலோகத்தில் இருக்கிறார். இவ்வாறு “என்னைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி” என்று மோசே சொன்னது கிறிஸ்துவைக் குறிக்காது முஹம்மதுவைத்தான் குறிக்கும் என்று முஸ்லிம்கள் நம்புகிறார்கள்.
மோசே கிறிஸ்துவைக் குறித்து தீர்க்கதரிசனம் கூறவில்லை என்றும் அவர் முஹம்மதுவைக் குறித்துத்தான் தீர்க்கதரிசனம் உரைத்தார் என்றும் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டு தங்கள் விசுவாசத்தை மாற்றி அமைத்துக்கொள்ளலாமா?
பதில்: முஸ்லிம்கள் தவ்ராத்தை நம்பி தங்களுடைய வாதத்தை நிரூபிப்பதற்காக அவர்கள் அதிலிருந்து மேற்கோள் காட்டுவது சரியானதே. மோசேயின் புத்தகம் உண்மையைத்தான் சொல்லுகிறது.
ஆனால், உபாகமம் 18:15-ஐ முஸ்லிம்கள் புரிந்துகொள்ளும்விதம் குறித்து சில உண்மைகளை நாம் கவனத்தில்கொள்ள வேண்டும். 1) என்னுடைய தாத்தாவும் மோசேயையும் முஹம்மதுவையும் போன்றவர்தான். அவர்கள் மூவருமே இயற்கையாக ஒரு தாய்-தந்தைக்குப் பிறந்தார்கள். 2) என்னுடைய தாத்தா மோசேயையும் முகமதுவையும் போன்றவர்தான். ஏனெனில் அவர்கள் மூவருமே இறந்துபோய் இந்த பூமியில் அடக்கம் செய்யப்பட்டார்கள். அதனால் என்னுடைய தாத்தா மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியாகிவிடுவாரா? ஒருபோதும் இல்லை! ஆகவே இவ்வாறு மோசேயையும் முஹம்மதுவையும் ஒப்பிடுவதன் மூலமாக நாம் மோசே முன்னுரைத்த தீர்க்கதரிசி முஹம்மது என்ற முடிவுக்கு வரமுடியாது.
பிந்தி வரக்கூடிய ஒரு மனிதன் மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசியாக இருக்க வேண்டுமாயின் அவர்களை ஒப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் தன்மைகள் சிறப்பான தன்மைகளாக இருக்க வேண்டும். நாம் கீழ்க்காணும் காரியங்களைக் கவனிக்க வேண்டும். 1) மோசேயும் கிறிஸ்துவும் ஒன்றுபோல இருந்தார்கள். ஏனெனில் இறைவன் இருவர் மூலமாகவும் பல அற்புதங்களைச் செய்தார். ஆனால் குரானின் எழுத்துக்களின்படி முகமது ஒரு அற்புதத்தைக்கூட செய்யவில்லை. 2) மோசே இறைவனுடைய திட்டத்தின்படி இறந்துபோய் தற்போது பரலோகத்தில் இருக்கிறார். கிறிஸ்துவின் வாழ்விலும் இது உண்மையாகாது. கிறிஸ்துவின் உலக வாழ்க்கையும் இறைவனுடைய திட்டத்தின்படி முடிவடைந்தது. இப்போது அவரும் பரலோகத்தில் இருக்கிறார். ஆனால் முஹம்மது விஷத்தின் பாதிப்பினால் இறந்துபோனார். இன்று அவர் பரலோகத்தில் இல்லை. இன்னும் மதினாவில் உள்ள கல்லறையில்தான் இருக்கிறார். இந்த ஒற்றுமையும் வேற்றுமையும் வேதாகமத்தில் மட்டுமல்ல, குரானிலும் போதிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கிறிஸ்துதான் மோசேயினால் முன்னுரைக்கப்பட்ட தீர்க்கதரிசி, முஹம்மது அல்ல.
துக்க செய்தி: மோசே தவ்ராத்தில் முஹம்மதுவைக் குறித்து தீர்க்கதரிசனம் உரைக்காமல் கிறிஸ்துவைக் குறித்தே தீர்க்கதரிசனம் உரைத்தார். மோசேயையும், கிறிஸ்துவையும், முஹம்மதுவையும் குறித்த போதனைகள் மூலமாக குரானே இந்த உண்மையை நிரூபிக்கிறது.
நல்ல செய்தி: மோசே பெற்றுக் கொண்டதும் இன்றைய வேதாகமத்தின் ஒருபகுதியாக இருப்பதுமான தவ்ராத்தை நாம் நம்பலாம். அது உண்மையைப் பேசுகிறது, அது திருத்தி அமைக்கப்படவில்லை. தவ்ராதையும் இன்ஜீலையும் குறித்து குரான் போதிக்கும் காரியங்கள் உண்மையா என்பதை அறிய இஸ்லாமியர்கள் வேதாகமத்தை ஆய்வு செய்வது சரியானதே.
கூடுதல் தகவல்: சில வருடங்களுக்கு முன்பாக நான் தென் ஆப்பிரிக்காவுக்குச் சென்றிருந்தேன். அங்கு ஜோகனஸ்பெர்க்கிலுள்ள இஸ்லாமிய அருட்பணி மையத்திற்குச் சென்றேன். அங்குள்ள நூலகத்தில் பல மணி நேரங்கள் செலவு செய்யும்படி எனக்கு அனுமதி கிடைத்தது. அந்த நூலகத்தில் ஒரு பெரிய அலமாரி நிறைய முஹம்மது வேதாகமத்தில் முன்னுரைக்கப்பட்டிருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்காக வேதாகமத்தை ஆய்வு செய்த இஸ்லாமிய அறிஞர்களுடைய ஆய்வு நூல்களாயிருந்தது. அந்த நூல்களில் மிகவும் பெரிய ஒரு புத்தகம் 1000-க்கு மேற்பட்ட பக்கங்களைக் கொண்டிருந்தது. அது ஒரு அறிஞர் தன்னுடைய அறிவர் பட்டத்திற்காக மெக்காவிலுள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்திற்கு சமர்ப்பித்த ஆய்வுக் கட்டுரையாக இருந்தது. பல முஸ்லிம்கள் நம்புவதைப் போல இந்த இஸ்லாமிய நூல்கள் வேதாகமம் ஒரு திருத்தப்பட்ட நூல் அல்ல என்பதையே நிரூபிக்கிறது. வேதாகமத்தின் வார்த்தைகளை உண்மையாக எடுத்துக்கொள்ளாவிட்டால், மதிப்பிற்குரிய இஸ்லாமிய அறிஞர்கள் மாதக் கணக்கில் அதனை ஆய்வு செய்வதில் தங்கள் நேரத்தைச் செலவு செய்வார்களா?
வேதாகமத்தில் முஹம்மதுவைக் குறித்த தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க முயற்சித்த முதல் நபர் இஸ்லாத்தைத் தழுவிய ஒரு யூதராவார். அவருடைய பெயர் அலி இப்ன் ராபன் அல் தபாரி (Ali ibn Rabban al-Tabari) என்பதாகும். அவர் கி. பி. 855-ல் ஒரு நூலை வெளியிட்டார் (கிதாஃப் அல் தின் வா அல் தவ்ஃலா – சமயத்தையும் அரசாங்கத்தையும் பற்றிய நூல்). அதில் அவர் வேதாகமத்தின் 16 புத்தகங்களிலிருந்து மேற்கோள்களைக் காட்டியிருந்தார். இந்த வசனங்களின் உதவியோடு வேதாகமத்தில் முஹம்மதுவைக் குறித்த தீர்க்கதரிசனம் கூறப்பட்டிருப்பதாக அவர் காண்பிக்க முனைந்தார். நாம் முன்பு பார்த்த மோசேயின் மேற்கோளைக் காண்பித்தபிறகு அவர் வேதாகமத்திலிருந்து கீழ்வரும் புத்தகங்களிலிருந்து மேற்கோள்களைக் காண்பித்தார்: தீர்க்கதரிசியாகிய தாவீதின் புத்தகம் (சங்கீதம் 48:1-2), ஏசாயா தீர்க்கதரிசி (9:2-4); எரேமியா தீர்க்கதரிசி (31:33-34), தானியேல் தீர்க்கதரிசி (7:2-8, 19-24) கிறிஸ்துவின் கூற்றுகள் (யோவான் 14:16, 26) மற்றும் பலருடைய எழுத்துக்களிலிருந்தும் மேற்கோள் காட்டப்பட்டிருந்தது. அவருடைய இந்த நூல் அப்பாஸித் கலிபா அல் முத்தவாக்கில் (Abbasid Caliph al-Mutawakkil) என்பவரால் இஸ்லாத்தைப் பரப்புவதற்கான முக்கிய கருவியாக எழுத்துக் கையாளப்பட்டது. இவ்வாறு 9-ம் நூற்றாண்டில் இஸ்லாத்தை நிறுவிய தலைவர்கள் வேதாகமம் யூதர்களாலும் கிறிஸ்தவர்களாலும் கறைப்படுத்தப்படவில்லை என்று நம்பினார்கள். ஏனெனில் அவர்கள் மோசே, தாவீது, ஏசாயா, ஓசியா, மீகா, ஆபகூக், செப்பனியா, சகரியா, எரேமியா, எசேக்கியேல், தானியேல், கிறிஸ்து மற்றும் அப்போஸ்தலனாகிய பவுலுடைய எழுத்துக்களைக்கூட எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார்கள். முஹம்மதுவின் மரணத்திற்குப் பிறகு பலவருடங்கள் கடந்து, இவ்விதமாக அவர்கள் செய்தபோது அவர்கள் இந்த இறை தூதர்களுடைய வார்த்தைகள் உண்மையானவை கறைபடுத்தப்படாதவை என்றும் நம்பினார்கள்.
அல் தபாரியின் ஒரு மேற்கோள் சிறப்பு வாய்ந்தது: கிறிஸ்து சொன்னார் : “என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்” (யோவான் 14:26). இந்த தேற்றரவாளன் இஸ்லாமிய தீர்க்கதரிசியைக் குறிப்பதால் கிறிஸ்து இங்கே முஹம்மதுவைப் பற்றியே பேசுகிறார் என்று தபாரி கூறினார். பல முஸ்லிம்கள் இன்று தபாரியின் உதாரணத்தைப் பின்பற்றுகிறார்கள். இவ்விதமாக அவர்கள் செய்யும்போது அவர்கள் இறைவன் பிதா என்று நம்புகிறார்கள். ஏனெனில் கிறிஸ்துவின் பரலோக பிதாதான் தேற்றரவாளனை இவ்வுலகத்திற்குள் அனுப்புகிறார்.
சாட்சி: என்னுடைய பெயர் அகமது. நான் சாட் என்ற ஆப்பிரிக்க நாட்டில் வாழ்கிறேன். நான் ஒரு காலத்தில் குரான் ஆசிரியராகப் பணிசெய்தேன். அப்போது நான் ரேடியோக்களை விற்பதன் மூலமாகவும் பழுதடைந்த ரேடியோக்களை சரிசெய்வதன் மூலமாகவும் என் வாழ்வை ஓட்டிக்கொண்டிருந்தேன். ஒரு நாள் நான் பழுதடைந்த ஒரு ரேடியோவைத் திருப்பியபோது ஒலிபரப்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியைக் கவனித்தேன். அது ஒரு கிறிஸ்தவ வானொலி நிலையத்திலிருந்து ஒலிபரப்பப்படுகிறது என்பதைக் கவனித்தேன். அதில் ஒரு அரபிய பேச்சாளர் தாவீதின் சங்கீதத்தை வாசித்துக்கொண்டிருந்தார். அந்த சங்கீதத்தின் கருத்து என்னை ஆழமாகப் பாதித்தது. இந்த சங்கீதத்தில் இருக்கிறபடி கிறிஸ்தவர்கள் இறைவனைத் துதிப்பார்களாயின் அவர்கள் நான் நினைப்பதைப்போல தீயவர்களாக இருக்க மாட்டார்கள் என்று சிந்திக்கத் தொடங்கினேன். அந்த சங்கீதத்தை நான் மறுபடியும் வாசிக்க ஆசைப்பட்டேன். ஆனால் என்னிடத்தில் வேதாகமம் இல்லை. பல மாதங்கள் தேடி ஒரு அரபிய வேதாகமத்தைக் கண்டுபிடித்தேன். பிறகு அந்த வானொலி நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்ட சங்கீதத்தைக் கண்டுபிடிக்க இன்னும் சில மாதங்கள் ஆனது. அது 145-வது சங்கீதமாக இருந்தது. அதை நான் கண்டபோது மட்டற்ற மகிழ்ச்சியடைந்தேன். அதன் உட்பொருளைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்தேன். இந்த சங்கீதத்திலிருந்து வேதாகமத்தின் செய்தியைப் புரிந்துகொள்ள இறைவன் துணைபுரிந்தார். நான் கிறிஸ்துவின் செய்தியினால் சிறப்பாகத் தொடப்பட்டேன். இந்த காரணத்தினால் நான் கிறிஸ்துவைப் பின்பற்ற முடிவுசெய்தேன். அதன் பிறகு நான் என்னுடைய மாணவர்களைப் பார்த்து, நாம் இனிமேல் குரானைப் படிக்கப்போவதில்லை, வேதாகமத்தைப் படிக்கப் போகிறோம் என்று சொன்னேன். அவர்களில் பலர் என்னுடைய முன்னுதாரணத்தைப் பின்பற்றி இன்று கிறிஸ்தவர்களாயிருக்கிறார்கள்.
Leave a Reply