கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர ,சகோதரிகள் அனைவருக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும் சமாதானமும் உண்டாவதாக.
சகோதரர் சலாம் பலாக்கி அவர்கள் எழுதிய ஆங்கில புத்தகம் தமிழில் மொழியாக்கம் செய்து வெளியிடப்பட்டு உள்ள செய்தியை உங்களுக்கு முன்பே அறிவித்து உள்ளோம்.http://iemtindia.com/?p=843
அந்த புத்தகத்தின் கட்டுரைகள் நம் வாசகர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதால் அதனை இங்கு பதிவு செய்கிறோம்.
சவால்: அல்லாஹ்விடமிருந்து மோசே தோராவைப் (தவ்றாத்) பெற்றுக்கொண்டதாகவும் தாவீதுக்கு சங்கீதங்கள் (சபூர்) கொடுக்கப்பட்டதாகவும் கிறிஸ்துவுக்கு நற்செய்தி (இன்ஜீல்) கொடுக்கப்பட்டதாகவும் குரான் போதிக்கிறது. இன்று இந்தப் புத்தகங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ள வேதாகமத்தை இஸ்லாமியர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. யூதர்கள் தோராவையும் சங்கீதங்களையும் கெடுத்துவிட்டார்கள். கிறிஸ்தவர்கள் நற்செய்தியைக் கெடுத்துவிட்டார்கள் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே, வேதாகமத்தில் இறைவனுடைய சித்தத்தைக் குறித்த கலப்பற்ற அறிவிப்புகள் எதுவுமில்லை என்று நமக்குச் சொல்லப்படுகிறது.
இந்த இஸ்லாமியர்களுடைய உறுதியான நம்பிக்கை அல்லாஹ்வினுடைய மாறாத மற்றும் உண்மையுள்ள வார்த்தையாகிய குரானுடைய கூற்றுகளையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. குரானில் “புத்தகத்தின் மக்கள்” என்று அழைக்கப்பட்டுள்ள யூதர்களும் கிறிஸ்தவர்களும் இறைவனுடைய வார்த்தையை மாற்றிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டு காணப்படுகிறது. குரானிலுள்ள இந்தக் கூற்றுக்களை ஆராயும்போது, அங்கு மூன்று வகையான குற்றச்சாட்டுகளை நாம் வேறுபடுத்திக் காணலாம். இந்த ஒவ்வொரு குற்றச்சாட்டையும் குரானிய வசனத்தின் உதாரணத்துடன் நாம் கவனிக்கலாம்.
1. புத்தகத்தின் மக்கள் மற்றவர்களிடமிருந்து சத்தியத்தை மறைத்து விட்டார்கள்: “வேதாகமத்தை நாம் யாரிடம் கொடுத்தோமோ அவர்கள் தங்கள் சொந்த மகன்களை அறிந்திருப்பதைப் போல அதை அறிந்திருக்கிறார்கள்; மேலும், நிச்சயமாக அவர்களில் ஒரு குழுவினர் அறிந்தே சத்தியத்தை மறைக்கிறார்கள்” (சுரா அல்-பகரா 2:146 மற்றும் அதே சுராவின் வசனங்கள் 42, 159 மற்றும் 174-176 ஆகியவற்றைப் பார்க்க).
2. “புத்தகத்தின் மக்கள்” தங்கள் புத்தகத்தை ஓதும்போது தங்கள் நாக்குகளைத் திரிக்கிறார்கள் என்று கூறப்படுகிறது: “மேலும் நிச்சயமாக, அவர்களில் ஒரு குழுவினர் (புத்தகத்தின் மக்கள்), புத்தகத்தில் (அதை ஓதும்போது) நாக்குகளைத் திரிக்கிறார்கள். அதன் மூலமாக அவர்கள் சொல்வது புத்தகத்திலிருந்து வருகிறது என்று நீங்கள் கருதும்படி அப்படிச் செய்கிறார்கள். ஆனால் அது புத்தகத்திலிருந்து வருவதல்ல. அவர்கள் அது அல்லாஹ்விடமிருந்து வருகிறது என்று சொல்கிறார்கள், ஆனால் அது அல்லாஹ்விடமிருந்து வருவதல்ல. இவ்விதமாக அவர்கள் அறிந்தே அல்லாஹ்வைக் குறித்த பொய்யை வலியுறுத்துகிறார்கள்.” (சுரா அல் இம்ரான் 3:76; சுரா அல்-நிஷா 4:46- வசனத்தையும் பார்க்க).
3. இஸ்ரவேல் மக்கள் இறைவனுடைய வார்த்தையை அதன் ஆரம்ப சூழமைவிலிருந்து பொய்யாக்கி விட்டார்கள்: “அவர்கள் (இஸ்ரவேல் மக்கள்) உங்களை விசுவாசிப்பார்கள் என்று நீங்கள் (முஸ்லிம்கள்) நம்புகிறீர்களா? அவர்களில் சிலர் அல்லாஹ்வினுடைய வார்த்தைகளைக் கேட்டு, அதைப் புரிந்துகொண்டபிறகு, அதைப் பொய்யாக்கிவிட்டார்கள் அல்லவா?” (சுரா 2:75 மற்றும் சுரா அல்-நிஷா 4:46(ஆ), சுரா அல்-இம்ரான் 3:13).
குரானிலுள்ள இந்தக் குற்றச்சாட்டுகள் தோரா, சங்கீதங்கள் மற்றும் நற்செய்திகள் ஆகியவற்றின் உண்மையையும், இன்று நம்முடைய கரங்களில் இருக்கும் முழு வேதாகமத்தினுடைய சத்தியத்தையும் சந்தேகிப்பதற்குப் போதுமானதா? இந்த வசனங்களின் அடிப்படையில் முழுவேதாகமமும் கெடுக்கப்பட்டுவிட்டது என்று நம்ப வேண்டுமா?
பதில்: கிறிஸ்தவர்கள் நற்செய்திகளைக் கெடுத்துவிட்டார்கள் என்று குரானில் எங்கும் குற்றஞ்சாட்டப்படவில்லை. ஆகவே, குரானை அடிப்படையாக வைத்து, இன்றிருக்கும் வண்ணமாகவே கிறிஸ்துவின் நற்செய்தியை ஒவ்வொரு முஸ்லீம்களும் நம்பலாம்.
புத்தகங்களின் மக்களைக் குறித்த குரானுடைய குற்றச்சாட்டுகளின் பின்ணணி, அது யூத மக்களாகிய இஸ்ரவேல் மக்களையே எப்போதும் குறிக்கிறது என்றும் ஒருபோதும் கிறிஸ்தவர்களைக் குறிப்பதில்லை என்றும் காண்பிக்கிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து கீழ்க்காணும் கூற்றுகளை நாம் முன்வைக்கலாம்.
1. புத்தகத்திலுள்ள சத்தியத்தை யூதர்கள் மறைக்கிறார்கள் என்று குரான் சொல்லுமானால் அதன் மூலம் அவர்கள் இறைவனிடமிருந்து வந்த புத்தகத்தின் சத்தியத்தை மாற்றவில்லை என்பதைக் குரான் போதிக்கிறது. யூதர்கள் புத்தகத்திலுள்ள பொருளைக் குறித்து அமைதிகாத்தாலும், புத்தகத்தின் பொருளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
2. இஸ்ரவேல் மக்கள் தங்கள் புத்தகத்தை ஓதும்போது தங்கள் நாக்குகளைத் திரித்து இறைவனைப் பற்றி பொய்களைப் போதிக்கிறார்கள் என்று குரான் கூறுமானால் அதன் மூலம் யூதர்களுக்கு வெளிப்படுத்தப்பட்ட புத்தகத்தின் பொருளை அவர்கள் பொய்யாக்கிவிடவில்லை என்பதை அறிவிக்கிறது. ஒரு புத்தகத்தை தவறாக மேற்கோள் காட்டுவதால் அதன் பொருள் மாறிவிடாது.
3. இறுதியாக, ஒரு குழு யூதர்கள் மட்டுமே இறைவனுடைய வார்த்தையைப் பொய்யாக்கிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டுகிறது. இவ்விதமாகப் போதிப்பதன் மூலமாக அனைத்து யூதர்களும் தங்களுடைய புத்தகத்தைப் பொய்யாக்கவில்லை என்றும், அந்த குழு யூதர்களுடைய முழுப் புத்தகத்தையும் கெடுத்துவிடவில்லை என்றும் போதிக்கிறது. மோசடியாளர்களைப் பின்பற்றாத யூதர்கள் தங்கள் புத்தகம் கெடுக்கப்பட்டு விடாதபடி அதைப் பார்த்துக்கொண்டார்கள்.
துக்க செய்தி: இன்றைய வேதாகமம் கெடுக்கப்பட்டது என்று விசுவாசிக்கும்படி இஸ்லாமியரை குரான் வலியுறுத்துவதில்லை. இஸ்ரவேல் மக்களுடைய புத்தகங்களும் கிறிஸ்தவர்களுடைய புத்தகங்களும் பொய்யாக்ககப்பட்டுவிட்டது என்ற இஸ்லாமியர்களுடைய வாதத்தை குரானிலுள்ள ஒரு குழுவினருக்கு எதிரான குற்றச்சாட்டை வைத்து நியாயப்படுத்த முடியாது.
நல்ல செய்தி: ஒவ்வொரு முஸ்லிமும் வேதாகமத்தை நம்பலாம். குரானுடைய கூற்றுகளின் அடிப்படையில் யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இறைவனால் வெளிப்படுத்தப்பட்ட வேதங்கள் நம்பத்தகுந்தவை என்று ஏற்றுக்கொள்ளலாம்.
கூடுதல் தகவல்: ஒருவர் குரானை வாசிப்பதன் மூலமாக அதன் பல்வேறு வசனங்கள் தோரா, நற்செய்தி மற்றும் முழு வேதாகமத்தின் சத்தியங்களை உறுதி செய்கிறது என்பதை அறிந்துகொள்ளலாம். முகமதுவின் காலத்தில் வேதாகமம் மாற்றப்படவில்லை என்பதை நிரூபிக்கும் சான்றுகளை முஸ்லிம்களுடைய நூலிலிருந்து பட்டியலிடுகிறோம்.
–மோசேயின் தோரா நம்பத்தகுந்தது: “நிச்சயமாக நாம்தாம் தவ்ராத்தை இறக்கிவைத்தோம். அதில் நேர்வழியும் ஒளியும் இருக்கின்றன. (அல்லாஹ்வுக்கு) கட்டுப்பட்ட நபிமார்களும், யூத வணக்கசாலிகளும், மேதைகளும் அல்லாஹ்வின் வேதத்தைப் பாதுகாக்கக் கட்டளையிடப்பட்டவர்கள் என்பதாலும் இன்னும், அதற்குச் சாட்சிகளாக அவர்கள் இருந்தார்கள் என்பதாலும் அதனைக் கொண்டே யூதர்களுக்குத் தீர்ப்பளித்துவந்தார்கள்…” (சுரா அல் மாயிதா 5:44)
–கிறிஸ்துவின் இன்ஜீல் நம்பத்தகுந்தது: “இன்னும் (முன்சென்ற தூதர்களான) அவர்களுடைய அடிச்சுவடுகளிலேயே மர்யமின் குமாரராகிய ஈஸாவை, அவருக்கு முன்னிருந்த தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக நாம் தொடரச் செய்தோம்; அவருக்கு நாம் இன்ஜீலையும் கொடுத்தோம்; அதில் நேர்வழியும் ஒளியும் இருந்தன; அது தனக்கு முன்னிருக்கும் தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாக இருந்தது; அது இறையச்சமுடையவர்களுக்கு நேர்வழி காட்டியாகவும் உபதேசமாகவும் இருந்தது. இன்னும் (உண்மையான) இன்ஜீலையுடையவர்கள், அதில் அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு தீர்ப்பு வழங்கட்டும்; … (சுரா அல் மாயிதா 5:46-47)
–தவ்ராத்தும் இன்ஜீலும் அதன் சத்தியங்களுக்காக ஆதரிக்கப்பட வேண்டும்: “வேதமுடையவர்களே! நீங்கள் தவ்ராத்தையும் இன்ஜீலையும், இன்னும் உங்கள் இறைவனிடமிருந்து உங்கள் மீது இறக்கப்பட்டவற்றையும் நீங்கள் நிலைநாட்டும் வரையிலும் நீங்கள் எதிலும் சேர்ந்தவர்களாக இல்லை”…(சுரா அல் மாயிதா 5:68)
–அல்லாஹ்வின் தூண்டுதலினால் கிடைக்கப்பெறும் வெளிப்பாடுகள் குறித்து முகமதுவிற்கு சந்தேகம் ஏற்பட்டால் அவர் வேதமுடையவர்களிடத்தில் கேட்க வேண்டும்: (நபியே!) நாம் உம்மீது இறக்கியுள்ள (வேதத்)தில் சந்தேகம் கொள்வீராயின், உமக்கு முன்னர் உள்ள வேதத்தை ஓதுகிறார்களே அவர்களிடம் கேட்டுப் பார்ப்பீராக! (சுரா யூனுஸ் 10:94; இதை அல் நஹ்ல் 16:43- உடன் ஒப்பிடுக)
மேற்கண்ட குரான் வசனங்கள் ஒரு முஸ்லிம் வேதாகமத்தை உண்மை என்று ஏற்றுக்கொள்ளலாம் என்றும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தெளிவுபடுத்துகிறது.
சாட்சி: என்னுடைய பெயர் அகமது, நான் மொரோக்கோவில் வாழ்கிறேன். நான் ஒரு எளிய உழைப்பாளி, எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது. இருப்பினும் கிறிஸ்துவின் நற்செய்தியின் மீது எனக்கு அதிக ஆர்வமிருந்தது. பௌசி என்ற மொரோக்கோ கிறிஸ்தவர் இயேசுவைப் பற்றிச் சொல்லும்படி என்னைச் சந்தித்தார். ஆனால் எனக்கு ஒரு பிரச்சனை இருந்தது. எனது மனைவியாகிய அமினா இதை எதிர்த்தாள். நான் கிறிஸ்தவனாக மாறினால் ஒழுக்கமற்றவன் ஆகிவிடுவேன் என்று அவள் பயந்தால். இதற்குக் காரணம் ஐரோப்பாவிலிருந்து எங்கள் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஒழுக்கக் கேடாக நடந்துகொள்வதை அவள் கண்டிருக்கிறாள். ஆகவே பௌசி எப்பொழுதெல்லாம் வருகிறாளோ அப்பொழுதெல்லாம் எனது மனைவி சத்தமாகத் தொழுகை செய்வாள். எங்கள் வீட்டைவிட்டு கிறிஸ்தவ ஆவியை விரட்டுவதற்காக எங்கள் மகளுடன் சேர்ந்து குரான் வசனங்களை சத்தமாக ஓதுவாள். ஒரு நாள் எங்கள் மகளுக்கு பித்தப்பையில் கல் இருப்பதால் அதிக வலி ஏற்பட்டது. அவளை நாங்கள் ஒரு அறுவை சிகிட்சைக்காக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல வேண்டியிருந்தது. ஆனால் அந்த மருத்துவமனை எங்கள் வீட்டிலிருந்து வெகுதூரத்திலிருந்தது. நாங்களும் எங்கள் மகளை ஆறுதல்படுத்த வந்திருந்த எங்கள் 8 உறவினரும் தங்கள் வீட்டில் தங்கிக்கொள்ள எனது கிறிஸ்தவ நண்பனாகிய பௌசி தன்னுடைய வீட்டைத் திறந்துகொடுத்தார். அருடைய வீடு மருத்துவமனைக்கு மிகவும் அருகில் இருந்த காரணத்தினால் நாங்கள் அங்கிருந்துகொண்டு எங்கள் மகளைக் கவனித்துக்கொள்ள வசதியாக இருந்தது. பௌசியின் வீட்டில் வாழ்ந்த நாட்களில் கிறிஸ்தவர்கள் தான் நினைத்ததைவிட நல்லவர்கள் என்று என்னுடைய மனைவி கண்டுகொண்டாள். அவர்கள் அன்புடன் உபசரிப்பவர்களாகவும், மதுபானம் குடியாதவர்களாகவும், சட்டவிரோத செயல்களைச் செய்யாதவர்களாகவும், ஒழுக்கமாக ஆடை அணிபவர்களாகவும் இருந்தார்கள். இதனால் எங்கள் மகள் சுகமடைந்த பிறகு எனது மனைவிக்கும் கிறிஸ்துவின் நற்செய்தியின் மீது ஆர்வம் ஏற்பட்டது. பௌசியோடும் அவருடைய மனைவியாகிய பத்திஹாவோடும் பல காரியங்களைக் கலந்துரையாடியபிறகு நானும் என்னுடைய மனைவியும் கிறிஸ்தவர்களானோம். இன்று என்னுடைய பிள்ளைகள் குரானுடைய வசனங்களை மனப்பாடம் செய்வதில்லை. தங்கள் மனதில் இறைவனுடைய வார்த்தை வாழும்படியாக வேதாகமத்தின் வசனங்களை மனப்பாடம் செய்கிறார்கள்.
விண்ணப்பம்: உண்மையுள்ள இறைவனே, நாங்கள் உம்மை அறிந்து, உமக்குப் பிரியமானதைச் செய்யும்படி உம்முடைய தூதுவர்களை நீர் இவ்வுலகத்திற்குள் அனுப்பியதற்காக உமக்கு நன்றி. மோசே, தாவீது, கிறிஸ்து போன்ற உம்முடைய தூதுவர்களுக்காக உமக்கு நன்றி. தவ்ராத், சங்கீதங்கள் மற்றும் நற்செய்திகள் மூலமாக நீர் அனுப்பிய செய்திகளுக்கு எங்கள் மனங்களைத் திறந்தருளும். நான் உமக்கு மட்டுமே கீழ்ப்படிய விரும்புகிறேன்.
Leave a Reply