பரிசுத்த வேதாகம மொழிபெயர்ப்பு பணி எப்படி நடைபெறுகிறது என்பதை நாம் நிச்சயம் அறிந்துகொள்ள வேண்டும்.பல இடர்பாடுகளுக்கு மத்தியில் வேதாகம மொழியியல் அறிஞர்கள் பரிசுத்த வேதாகமத்தை மொழிபெயர்க்கிறார்கள்.குறிப்பாக குரூக் மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்க்கும் பணியில் உள்ள நண்பர் சுவிஷேச ஜெபக்குழு அதன் படிகளை குறித்து விளக்கியுள்ளனர்.அவற்றை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.அதற்காக ஜெபிக்கவும் வேண்டும் மாத்திரமல்ல தொடர்ந்து உலகின் பல மொழிகளில் பரிசுத்த வேதாகமம் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ள நம்முடைய ஊழியங்களுக்காக ஊழியர்களுக்காக நாம் ஜெபிக்க வேண்டும் .நம் ஆண்டவரின் பிரதான கட்டளையான
மாற்கு 16:15 பின்பு, அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உலகமெங்கும் போய், சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்.
என்ற கட்டளையை உணர்ந்து செயல்படுவோம்.
குரூக் வேதாகம மொழி பெயர்ப்புப் பணியைப் பற்றி விபரத்தை உங்கள் கவனத்திற்குக் கீழே காணலாம்.
குருக்ஸ் வேதாகம மொழிபெயர்ப்பு ஊழியர்கள்: திரு.ஆர். தாமஸ் குடும்பம் துவக்கிய ஆண்டு: மே 2002
குருக் இன ஆதிவாசி மக்கள் சத்தீஸ்கார்,ஒரிசா,ஜார்க்கண்ட்,பீகார்,மேற்கு வங்காளம்,அஸ்ஸாம் ஆகிய மாநிலத்திளிலும்,வங்க தேசத்திலும்,நேபாளத்திலும் வசிக்கின்றனர்.சுமார் 50,00,000 குருக் இன மக்கள் உள்ளனர்.நமது ஊழியர்கள் பணி செய்யும் சத்தீஸ்கார் மாநிலத்தில் சுமார் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர்.
நமது ஊழியர்கள் இங்கு சென்ற மே 2002 ஆண்டு முதல்,
• சுமார் ஒன்றரை ஆண்டுகள் குருக் மொழி பற்றிய ஆய்வுப்பணி செய்யப்பட்டது.
• 2004 ஜனவரி முதல் இந்த மொழியை கற்க ஆரம்பித்தனர்.
• இம்மொழியின் ஒலி முறைமையை ஆராய்ந்தனர்.
• குருக் மொழிக்கு எழுத்து அமைப்பு கொடுத்து,மொழியின் இலக்கணத்தைப் பற்றி ஆராய்ந்தனர்.
• தேவ கிருபையால் முதல் கட்டப்பணியை முடித்து, 2007 செப்டம்பர் முதல் புதிய ஏற்பாட்டை மொழிபெயர்க்க ஆரம்பித்தனர்.
• 2008 ம் ஆண்டில் எழுதப் படிக்கத் தெரியாத முதியோர்களுக்கான முதியோர் கல்வி திட்டத்தை ஆரம்பித்தனர்.
• இதுவரை தேவனின் பெரிதான கிருபையால் மத்தேயு,மாற்கு,லூக்கா, ரோமர்,கலாத்தியர்,1,2 தெசலோனிக்கேயர்,1,2, தீமோத்தேயு,தீத்து,எபிரேயர் புத்தகங்களை மொழி பெயர்த்து முடித்துள்ளனர்.
மொழிபெயர்ப்புப்பணியில் ஒவ்வொரு புத்தகமும் முடிக்கப்பட பல படிகள் உள்ளன.
முதல் படி: முதல் நகல் எடுத்தல் (கிரேக்க,ஆங்கில மொழியிலிருந்து குருக் மொழிக்கு மொழி மாற்றம் செய்யப்படுதல்)
இரண்டாம் படி : கிராம மக்களிடத்தில் சரிபார்த்தல் (முதல் நகல் முடித்த புத்தகத்தை கிராமத்தில் கொண்டுபோய் மொழி பேசுகிற மக்களிடம் அவர்களுக்கு மொழியாக்கம் செய்யப்பட்டது சரியாக விளங்கிக்கொள்ள வண்ண உள்ளதாவென்று சரிபார்க்கின்றனர்).
மூன்றாம் படி: இரண்டாம் நகல் எடுத்தல் (கிராம மக்களிடம் சரிபார்த்தபின் தவறுகள் கடின வார்த்தை,விளங்கிக்கொள்ள முடியாத பகுதிகளை திருத்தி எடுக்கின்றனர்).
நான்காம் படி: மொழி மன்றத்தில் சரிபார்த்தல் (2 ம் நகல் எடுத்தபின் அதை மொழி மன்றத்தில் –மொழி மன்றமெனில்,பல கிராமங்களிலுள்ள முக்கிய நபர்களைக் கொண்ட ஒரு குழு)
ஐந்தாம் படி: மூன்றாம் நகல் எடுத்தல் (மொழி மன்றத்தில் சரிபார்க்கப்பட்டபின் தவறுகளை திருத்தி எடுக்கும் நகல்)
ஆறாம் படி: கிரேக்க மொழி வேதம் அல்லது ஆங்கில வேதம் RSV யுடன் ஒப்பிட்டு சரிபார்த்து 4 ம் நகல் எடுத்தல்.
ஏழாம் படி: மூல மொழியான கிரேக்க மொழி வேதத்துடன் ஒப்பிட்டு பார்த்து சரிசெய்த பின் மொழிபெயர்க்கப்பட்ட புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்தல்,பின் ஆங்கில மொழிபெயர்ப்பை கிரேக்க வல்லுநர்களிடம் அனுப்பிக்கொடுத்தல்.
எட்டாம் படி: கிரேக்க மொழி வல்லுநர்கள் கொடுக்கின்ற தேதிகளில் அவர்களுடன் உட்கார்ந்து குருக் மொழி பேசும் ஒருவரின் உதவியுடனும் கிரேக்க மொழி வேதத்துடன் ஒப்பிட்டு பார்த்து சரி செய்தல்.(consultant checking)
ஒன்பதாம் படி: ஐந்தாம் நகல் எடுத்தல்(கிரேக்க வல்லுநர்களின் உதவியால் சரிசெய்த பின் தவறுகளை சரிசெய்து எடுக்கும் நகல்).
சில வேளையில் (consultant approval) அனுமதி கிடைக்கும் வரை பல நகல் எடுக்க வேண்டியது வரும்.
இத்தனை படிகளை ஒவ்வொரு புத்தகத்திற்கும் கடைப்பிடிக்க வேண்டும் அப்போதுதான் அந்த புத்தகம் மொழியாக்கம் செய்யப்பட்டதாக மாறும்,இவ்வாறாக முயற்சித்து தேவனின் பெரிய கிருபையால், மேலே குறிப்பிட்டுள்ள 11 புத்தகங்கள் மொழியாக்கம் செய்து முடிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறாக 14 மொழிகளில் வேதாகம மொழிபெயர்ப்புப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஒவ்வொரு ஊழியர் குடும்பத்திற்காக தேவனை துதித்து, ஊக்கமான அவர்களுக்காக ஜெபிப்போம், தேவ ஞானம் வெளிப்படவும்,தேவகிருபை இன்னும் அதிகமாய் தாங்கவும்,கடினமான சூழ்நிலைகளில் சோர்ந்து போகாமல் முன்னேறிச் செல்லக் கூடிய கிருபைகளை ஆண்டவர் தரவும் ஜெபிப்போம்.
நண்பர் சுவிஷேச ஜெபக்குழுவின் ஜெபக் கையேட்டில் இருந்து எடுக்கப்பட்டது.
RichardAsir says
நம் தேவன் ஜீவனுள்ள தேவன் என்பதை இதன் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.தேவனுடய பலத்த கிரியைகள் தொடர்ந்து வெளிப்பட நாம் தொடர்ந்து ஜெபிப்போமாக.ஆமென்!
colvin says
ஏனைய மதப் புத்தகங்கள் தங்கள் சுயவிருப்படியெல்லாம் மொழிபெயர்க்கப்பட வேதாகமம் ஆனது மிகுந்த ஜெபத்தோடும், அதிக கவனத்தோடும் மிக கடின உழைப்போடும் மொழிபெயர்க்கப்படுவதைப் பார்க்கும் போது தேவனை துதிக்காமல் இருக்க முடிவதில்லை. மிக அருமையான செய்தி