அல்லாஹ்வின் சவால்:குர் ஆனின் ஒரு அத்தியாயத்தை போல் இன்னொரு அத்தியாயத்தை கொண்டு வரமுடியுமா?
கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளுக்கு மீண்டும் இந்த கட்டுரை மூலம் உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.அன்பு நண்பர்களே மேலே உள்ள வாதமானது குரானில் அல்லாஹ்வால் முஹம்மது அவர்கள் காலத்தில் அரபு உலகில் வாழ்ந்த மக்களை பார்த்து வைக்கப்பட்ட சவால் ஆகும்.இது பெரிய சவால் என்று இஸ்லாமிய அறிஞர்கள் அடிக்கும் தம்பட்டத்தை பார்க்கும் பொழுது அவர்களின்அறியாமையை கண்டு அழுவதா அல்லது சிரிப்பதா என்று தெரிவதில்லை.இந்த அளவுக்கு கூட சிந்திக்கும் திறன் இல்லையே என்று நினைக்கத் தோன்றுகிறது.ஒரு இறை தீர்க்கதரிசியிடம் நீங்கள் தீர்க்கதரிசியா எப்படி நம்புவது என்று கேட்டால் அவர் ஏதோ ஒரு வகையில் தன்னை கடவுளினால் அனுப்பப்பட்டவர்தான் என்று நிரூபிக்க வேண்டும் இல்லை என்றால் நீங்கள் நம்பினால் நம்புங்கள் இல்லை உங்களுக்கு வரும் அழிவில் இருந்து உங்களை யாரும் காப்பாற்ற முடியாது என்று சொல்லிவிடவேண்டும்.ஆனால் அல்லாஹ்வின் தூதர் என்னும் ஹஜரத் முஹம்மது அவர்களிடம் இப்படிப்பட்ட விமர்சனத்தோடு வந்த மக்களிடம் அல்லாஹ் ஒரு புதுவிதமான சவாலை வைத்தார்.
தான் ஜிப்ரீல் என்னும் தூதன் மூலம் முஹம்மது அவர்களுக்கு ஓதி கற்றுகொடுக்கப்பட்ட சில வசனங்களை போல் ஒரு அத்தியாயத்தை நீங்கள் கொண்டுவர முடியுமா? என்பதுதான் இந்த சவால்.
முதலில் நாம் சிந்திக்க வேண்டியது ஹஜரத் முஹம்மது அவர்கள் கால மக்கள் குர்ஆன் ஒருமிக சிறந்த புத்தகமாக அவர்கள் நினைக்கவே இல்லை.அது போல் அது குர்ஆன் புத்தகமாகவும் இல்லை.எனவே அவை கட்டுக்கதைகளின் தொகுப்பாகவே அவர்கள் இதை விமர்சித்து வந்தார்கள்.இதை நாமாக சொல்லவில்லை குரானின் பல வசனங்களை நாம் வாசிக்கும் போது அப்போதைய மக்களின் மனநிலையை நாம் நன்றாக உணரமுடியும்.
குர்ஆன் 6:33 (நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
குர்ஆன் 16:24 “உங்களுடைய இறைவன் எதை இறக்கி வைத்தான்?” என்று (குர்ஆனை குறிப்பிட்டு) அவர்களிடம் கேட்கப்பட்டால், “முன்னோர்களின் கட்டுக்கதைகள்” என்று அவர்கள் (பதில்) கூறுகிறார்கள்.
குர்ஆன் 16:101 (நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) “நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்” என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.
குர்ஆன் 21:5 அப்படியல்ல! “இவை கலப்படமான கனவுகள்” இல்லை, “அதனை இவரே கற்பனை செய்து கொண்டார்” இல்லை, “இவர் ஒரு கவிஞர்தாம்” (என்று காஃபிர்கள் பலவாறாகக் குழம்பிக் கூறுவதுடன்) முந்தைய (நபிமார்களுக்கு) அனுப்பப்பட்டது போல் இவரும் ஓர் அத்தாட்சியை நம்மிடம் கொண்டு வரட்டும்” என்றும் கூறுகின்றனர்.
குர்ஆன் 25:4 “இன்னும்; இது (அல் குர்ஆன்) பொய்யேயன்றி வேறு இல்லை இதை இவரே இட்டுக்கட்டிக் கொண்டார் இன்னும் மற்ற மக்கள் கூட்டத்தாரும் இதில் அவருக்கு உதவிபுரிந்துள்ளார்கள்” என்றும் நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர் ஆனால் (இப்படிக் கூறுவதன் மூலம்) திடனாக அவர்களே ஓர் அநியாயத்தையும், பொய்யையும் கொண்டு வந்துள்ளார்கள்.
குர்ஆன் 25:5 இன்னும் அவர்கள் கூறுகிறார்கள்; “இன்னும் அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே அவற்றை இவரே எழுதுவித்துக் கொண்டிருக்கிறார் – ஆகவே அவை அவர் முன்னே காலையிலும் மாலையிலும் ஓதிக் காண்பிக்கப்படுகின்றன.”
மேலே கண்ட குர் ஆன் வசனங்களின் அடிப்படையில் நாம் சொன்ன விசயங்கள் உண்மை என்பதை நீங்கள் உணர்ந்து இருப்பீர்கள்.
குர் ஆனின் சவால்
அடுத்து இப்பொழுது அல்லாஹ் குர்ஆன் மூலம் குர்ஆன் கட்டுக்கதை ,பொய்,அது முஹம்மது அவர்கள் புனைந்தது என்ற வாதங்களை முறியடிக்க ஒரு மிகப்பெரிய சவாலை முன்வைக்கிறார்.அது என்ன தெரியுமா?எந்த குர்ஆன் பொய் என்றும் கட்டுக்கதை என்று அந்த மக்கள் சொல்லிக்கொண்டிருக்கிறார்களோ அவர்களே இந்த குர் ஆனை போல் ஒரு அத்தியாயம் கொண்டுவர முடியுமா என்று.அருமை சகோதரர்களே எந்த புத்தகம் பொய்யும்,கட்டுகதையும் நிறைந்தது என்று நம்புகிறார்களோ அது போல ஒரு அத்தியாயம் கொண்டுவாருங்கள் என்பது ஒரு சவாலா என்பதை கொஞ்சம் சிந்தியுங்கள் .
நாமே ஒரு புத்தகத்தை படித்துவிட்டு அதை பொய் என்று சொல்லுவோம் என்றால் அதை போன்ற இன்னொன்றை கொண்டுவா என்று சவால் விடுபவர்களை பார்த்து நாம் என்ன கேட்போம்.இதை அறிவுடைமையான வாதமாக எடுத்துக்கொள்ளுவோமா?
ஒரு புத்தகம் மாதிரி இன்னொரு புத்தகம் கொண்டுவர முடியுமா?
உலகில் ஒரு புத்தகம் போல் இன்னொரு புத்தகம் கொண்டுவர முடியுமா என்று கொஞ்சம் சிந்தியுங்கள்.ஒன்று அந்த புத்தகத்தை பார்த்து அப்படி எழுதினால் தான் அது சாத்தியம்.இது உலகில் உள்ள எல்லா புத்தகத்திற்கும் உடைய தனித்தன்மையாகும்.
உதாரணத்துக்கு திருக்குறள் .
உலகப்பொதுமறை என்று அழைக்கப்படும் திருக்குறள் போல் இன்னொரு திருக்குறளை நாம் கொண்டுவந்தால் அதை திருக்குறளுக்கு இணையானது என்று யாராவதும் ஏற்றுக்கொள்ளுவார்களா என்பதை சிந்தித்துப்பாருங்கள்.
சரி அல்லாஹ்வின் வாதத்தை ஏற்று அப்படி ஒரு புத்தகத்தை எழுதி வந்தால் அதை குர் ஆனை போன்ற ஒன்று என்று யார் ஏற்றுகொள்ளுவார்கள்.நாம் ஒரு புத்தகத்தை எழுதிவிட்டு இப்படிப்பட்ட ஒரு சவாலை விடுவோம் .உலகில் யாராவது நான் எழுதிய புத்தகம் மாதிரி எழுதமுடியாது.முடிந்தால் எழுதுங்கள் பார்க்கலாம் என்று சொல்லுகிறோம் என்று வைத்துகொள்ளுங்கள் ,யாராவதும் ஒருவர் ஒரு புத்தகத்தை எழுதி நம்மிடம் வந்து காட்டினால் நாம் என்ன சொல்லுவோம் இல்லை நான் எழுதிய அளவுக்கு நீ எழுதவில்லை என்போம்.இது ஒரு முடிவை கொண்டுவர முடியாத வாதமாகும்.அல்லாஹ் அங்கு வாழ்ந்த மக்களிடம் தப்பித்துக்கொள்ள இது போன்ற சாதாரண மனிதர்கள் சிந்தித்தால் கூட பிடிபடகூடிய அளவுக்கு சாதாரண ஒரு சப்பை சவாலை வைத்ததை இன்றைக்கும் இஸ்லாமிய அறிஞர்கள் சிலாக்கித்துக்கொள்ளுவதை பார்த்தால் அவர்களுடைய நிலை பரிதாபமானதாகும்.
அஹமதிய நபி மிர்சா குலாம் அஹமத்
ஈஸா நபி மரணமடைந்தார் என்று நம்பும்,இஸ்லாமியர்களில் ஒரு பிரிவினரான அஹமதிய ஜமாத்தின் நிறுவனர் மிர்சா குலாம் அஹமத் (பெப்ரவரி 18, 1835, மே 26, 1908) அவர்கள் தன்னையும் ஒரு நபி என்று பிரகடனப்படுத்திக்கொண்டார்.அது மட்டும் இல்லை அவர் பல புத்தகங்களையும் எழுதி உள்ளார்.அதில் குறிப்பாக அவர் குரானுக்கு விளக்கவுரையும் (தப்சீர்) எழுதி உள்ளார்.அவருடைய தப்சீருக்கு எதிரான வாதம் எழும்பியபோது அவரும் அவருடைய தப்சீரை விமர்சித்தவர்களிடம் என்ன சொன்னார் தெரியுமா?அல்லாஹ் சொன்னதை போலவே எதிர்கிறவர்கள் ஒரு தப்சீரை எழுதி வாருங்கள்.எது சிறந்தது என்று பார்ப்போம் என்றார்.என்ன நண்பர்களே தலை சுற்றுகிறதா?நான் சொல்லுவது பொய் இல்லை.தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் மவ்லவி பிஜே அவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுடன் ஒரு விவாதம் நடத்தினார்.அந்த விவாதத்தில் இந்த புத்தகம் எழுதிவாருங்கள் என்ற சவால் விமர்சனத்துக்குள்ளானது.அந்த சமயத்தில் மவ்லவி பிஜே அவர்கள் அவரை அறியாமலேயே நமது சார்பாக அல்லாஹ்வின் சவாலுக்கே ஒரு அழகான விமர்சனத்தை எடுத்து மிர்சா குலாம் அஹமது அவர்களின் வாதத்தை விமர்சித்துள்ளார்கள்.அதைதான் இந்த வீடியோவில் நாம் காணபோகிறோம்.முதலில் மவ்லவி பிஜே அவர்கள் அந்த விவாதத்தில் பேசியது அடுத்து தற்போது அல்லாஹ்வின் சவாலை சிலாகித்து சொல்லும் சகோதரர் சையது இபராஹிம் அவர்களின் பேச்சு,அடுத்து அல்லாஹ்வின் சவாலை போலவே உள்ள மிர்ஸா குலாம் அஹமது அவர்களின் சவாலை விமர்சிக்கு மவ்லவி பிஜே அவர்களின் வீடியோ ஆகியவை இணைத்து உங்களுக்கு பதிவேற்றப்படுகிறது.சத்தியத்தை அறிந்துகொள்ளுங்கள் சத்தியம் உங்களை விடுவிக்கும்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையும்,சமாதனமும் உங்களுக்கு உண்டாவதாக
Leave a Reply