இயேசுக்கிறிஸ்து கடவுளல்ல மனிதன் தான் என்று காட்ட இஸ்லாமிய அறிஞர்கள் எடுத்துவைக்கும் வாதங்களுக்கு ஆதாரமாக உள்ள ஒரு வசனம் அவர் தம் மறுவருகையின் காலம் எப்போது என்று தமக்குத் தெரியாது என்று கூறியதாகும்.
“அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர்தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.“ (மாற். 13:32)
என்று இயேசுக்கிறிஸ்து கூறியதால் , தம் வருகையின் காலத்தை அறியாதிருந்த இயேசுகிறிஸ்து சகலமும் அறிந்தவரல்ல என்றும், இதனால் அவர் தேவனாய் இருக்க முடியாது என்றும் இஸ்லாமிய அறிஞர்களின் வாதமாகும்.உண்மையில், இயேசுக்கிறிஸ்துவின் மாம்சமாகுதலை (யோவான் 1:14) சரியான விதத்தில் அறிந்து கொள்ளாத வரையில், அவரது இக்கூற்று இஸ்லாமிய அறிஞர்களின் தர்க்கத்தை உண்மை என்று நிரூபிப்பது போலவே தென்படும். நாம் ஏற்கனவே பார்த்தபடி இயேசுக்கிறிஸ்து மாமிசமாகுதல் தெய்வீகத் தன்மைகளைத் துறப்பதையல்ல, மாறாக மனிதத் தன்மைகளை சேர்ப்பதாகவே இருந்தது.
ஆரம்பத்தில் தெய்வத்தன்மையுடையவராயிருந்த இயேசுக்கிறிஸ்து மனிதராகிய போது மனிதத் தன்மைகளையும் சேர்த்துக் கொண்டார். எனவே அதன் பின்னர் இரு தன்மைகளையும் கொண்டவராகவே இருந்தார். எனினும், தேவத் தன்மைகளுடன் இருந்தவர் மனிதத் தன்மைகளை சேர்த்துக் கொண்டபோது அவர் தேவத் தன்மைகளை மனிதத் தன்மையின் வரையறைக்குள் அடக்கி வைத்திருந்தார். இதனால் தேவத்தன்மையான சகலவற்றையும் அறியும் அறிவை மனிதத் தன்மையான சகலவற்றையும் அறியாதிருக்கும் தன்மைக்குள் அடக்கி வைத்திருந்தார். சகலவற்றையும் அறியும் ஆற்றல் மிக்க தேவத்தன்மை உடையவராய் அவர் இருந்தும் சில விசயங்களை அறியாதிருந்ததற்கு குறிப்பாக தனது மறுவருகையின் காலத்தை அறியாதிருந்ததற்க்கு இதுவே காரணமாகும். அறியாமை மனிதத் தன்மையின் முக்கியமான ஒரு அம்சமாய் இருப்பதனால், உண்மையான மனிதத் தன்மையைத் தம்மோடு சேர்த்துக் கொண்ட இயேசுக்கிறிஸ்து மனிதராக இவ்வுலகில் வாழ்ந்த காலத்தில் சில விசயங்களை அறியாதவராகவே இருந்தார்.
இயேசுக்கிறிஸ்து மனிதத் தன்மையின் வரையறைக்குள் தம்மை உட்படுத்தி, மனிதர்களைப் போலவே சில விசயங்களை அறியாதிருந்தபோதும் சில சந்தர்ப்பங்களில், மனிதர்களால் எவ்விதத்திலும் அறிந்து கொள்ள முடியாத விசயங்களை அறிந்திருந்தமைப் பற்றியும் சுவிஷேசப் புத்தகங்களில் நாம் வாசிக்கலாம். அவர் மனிதர்களுடைய உள்ளங்களில் இருப்பதையும் அவர்களுடைய கடந்தகால வாழ்க்கை விபரங்களையும் எதிர்கால சம்பவங்களையும் அறிந்திருந்தார்.
இதற்குக் காரணம் இயேசுக்கிறிஸ்து தேவனுடைய திட்டத்தின்படியான பணியைச் செய்வதற்காக இவ்வுலகுக்கு வந்தமையால் , அப்பணியைச் செய்வதற்கு வேண்டிய அளவு தெய்வீக அறிவு அவருக்கு இருந்தது. ஆனால், அவர் தாம் செய்ய வந்த பணியோடு தொடர்பில்லாத விடயங்களைப் பொறுத்தவரை, மானிடத் தன்மையின் வரையறை காரணமாக அவற்றை அறியாதவராகவே இருந்தார். இயேசுக்கிறிஸ்து மனிதராக வாழ்ந்த காலத்தில் மனித வரையறைக்கு உட்பட்டிருந்தமையால் “தமது தெய்வீகத் தன்மைகளை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் மட்டுப்படுத்தி வைத்திருந்தார். எனினும் இவ்வரையறை தெய்வீகத் தனமைகளை அவரிலிருந்து அகற்றிவிடவில்லை.
தெய்வீகத் தன்மையின் செயற்பாடுகள் மனிதத் தன்மையால் மட்டுப்படுத்தப் பட்டிருந்தது. இஸ்லாமிய அறிஞர்கள் இயேசுக் கிறிஸ்துவின் “மாமிசமாகுதலை“ அதாவது, தெய்வீகத் தன்மைகளோடு அவர் மனிதத் தன்மைகளையும் கருத்திற் கொள்ளாததினால் அவரது மானித் தன்மை தெய்வீகத் தன்மையில் ஏற்படுத்திய வரையறைகளை அறியாதவர்களாக, இத்தகைய வரையறைக்கு உட்பட்ட காலத்தில் அவர் கூறிய சில கூற்றுக்களை அடிப்படையாகக் வைத்து, அவரது தேவத்துவத்தை மறுதலித்து வருகின்றனர். இயேசுக்கிறிஸ்து மனித வரையறைக்கு உட்பட்டிருந்த காலத்திலும் தேவத் தன்மை உடையவராகவே இருந்தார் என்பதை சுவிசேஷங்களிலும்,நிரூபங்களிலும் நாம் வாசிக்கலாம்.குறிப்பாக
கொலோசெயர் 2 :9.ல் ஏனென்றால், தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது.
என்று தெளிவாக சொல்லுகிறதை நாம் அறியலாம்.வேதாகம வசனங்களின் ஆழங்களை அறியாமல் இஸ்லாமிய அறிஞர்கள் வேதாகமத்தை விமர்சிப்பதால் தாங்களும் உண்மையை அறிய முடியாமல் மக்களையும் அறியாமையில் தள்ளுகிறார்கள்.
இந்த கட்டுரை M.s.வசந்த குமார் அவர்களின் கட்டுரையை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது
திருப்திகரமான விளக்கம். மிக்க நன்றி
மிகவும் உபயோகமான விளக்கம். இந்த பணியை இடைநிறுத்தி விட வேண்டாம்
நன்றி உங்கள் ஊக்கத்துக்கு
நீண்ட காலமாக புரியாதிருந்த விடயம் விளங்கி விட்டது.நன்றி
Excellent Explanation Brother. Thank You very much. Please continue your good work. We will continue to pray for muslims to be saved.